டெல் அவிவ்: காசா போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களம் இறங்கியது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்த லெபனான் மீதும் போரை அறிவித்தது இஸ்ரேல். இந்நிலையில் இந்த போர் தற்போது நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அது மீறப்படும்பட்சத்தில் போர் கையை மீறி செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது. போர் தொடங்கி சமீபத்தில் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பாஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் கொன்று குவித்திருந்தது. அதாவது சுமார் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இப்போரில் உயிரிழந்திருந்தனர்.
லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்திருந்தனர். போர் பசியையும், நோய் தொற்றையும் ஏற்படுத்தியது. குறிப்பாக பல பத்து ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையாக ஒழிக்கப்பட்ட போலியோ நோய் மீண்டும் காசாவில் பரவ தொடங்கியது. இதையெல்லாம் பார்த்த உலக நாடுகள் போர் நிறுத்தம் குறித்த கோரிக்கையை முன்வைக்க தொடங்கினர். ஆனால் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, லெபனான் மீதும் போரை தொடங்குவதாக அறிவித்தது.
காரணம் ஹிஸ்புல்லாதான். பாலஸ்தீன போரில் ஹமாஸுக்கு ஹில்புல்லா பெரும் உதவி செய்திருக்கிறது. லெபனானிலிருந்து இஸ்ரேல் படைகளை ஹிஸ்புல்லா தாக்கி அழித்தது. எனவே இந்த பகையை மனதில் வைத்து லெபனான் மீது போரை அறிவித்தது இஸ்ரேல். போர் தொடங்கிய ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான லெபனானியர்கள் இடம் பெயர்ந்தனர். இஸ்ரேலில் இந்த எண்ணிக்கை 50,000ஆக இருந்தது. போரில் இரு தரப்பிலும் கணிசமான அளவில் உயிரிழப்புகள் இருந்தன. எனவே போரை நிறுத்த அமெரிக்கா முன்வந்தது.
இந்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆயினும், சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த போர் நிறுத்தம் 60 நாட்கள் வரை அமலில் இருக்கும். தேவையெனில் மேலும் நீட்டிக்கப்படும். இந்த நாட்களில் இஸ்ரேல் படைகள் பின் வாங்கப்படும். ஹிஸ்புல்லா தெற்கு லெபனான் முழுவதும் தங்கள் ராணுவத்தை விரிவாக்கும்.
போர் நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேல் நேரப்படி புதன்கிழமை காலை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. லிட்டானி ஆற்றின் தென் பகுதியில் லெபனான் வீரர்கள் மற்றும் ஐநா அமைதிப்படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள். போர் நிறுத்தத்தை அமெரிக்காதான் முன்மொழிந்திருக்கிறது. எனவே, அமைதி நடவடிக்கைகளை கண்காணிக்க குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.
அமைதி ஒப்பந்தத்தை மீறி ஹிஸ்புல்லா செயல்பட்டால் அதற்கான எதிர் நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனவும் ஒப்பந்த்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தை ஹிஸ்புல்லா எதிர்த்திருக்கிறது.