பெய்ஜிங்: சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள வாங்கு தங்க சுரங்கத்தில் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குவியல் மறைந்து கிடப்பதை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால், சீனாவின் பொருளாதார மதிப்பு உலக அளவில் உயர வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் ஆபரணத்துக்காகவும் சேமிப்புக்காகவும் தங்கம் வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகள், சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சீனர்களும் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். தற்போது சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீனாவின் ஹூனான் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வாங்கு தங்க வயலில் சூப்பர் ஜெயண்ட் எனப்படும் மிகப்பெரிய அளவிலான தங்க இருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஹூனான் மாகாணத்தின் புவியியல் பணியகத்தின் பிரதிநிதிகள் குழு சீன அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அந்த சுரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர்களும் தொழிலாளர்களும் 40க்கும் மேற்பட்ட தங்க இருப்பு தடயங்களை கண்டறிந்தனர். கிட்டத்தட்ட அதில் 330 டன் அதாவது 300 மெட்ரிக் டன் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் 2000 மீட்டர் ஆழத்திற்கு கீழே இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் 3d கணினி மாதிரிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அதற்கும் கீழே அதாவது சுமார் 3000 மீட்டர் ஆழத்தில் 1100 டன் தங்கம் மறைந்திருக்கலாம் எனவும் கணித்திருக்கின்றனர்.
ஒருவேளை அந்த தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால் அதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவானாக இருக்கும், டாலர் மதிப்பில் 83 பில்லியன் ஆகவும், ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு கனிம ஆய்வுக்காக சீன அரசு 2020 ஆம் ஆண்டிலேயே 100 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் 115 கோடி முதலீடு செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு காரணமாக சீனாவின் பொருளாதார மதிப்பு உலக அளவில் உயர வாய்ப்புள்ளது. தற்போது இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தாது மணலில் ஒரு மெட்ரிக் டன் மணலில் சுமார் 138 கிராம் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக உலக அளவில் தங்கத்தை பிரித்து எடுப்பதில் ஏற்ற இறக்கம் இருப்பதால் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படுவது இல்லை. அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி தென்னாப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் சுமார் 1025 டன் தங்கம் இருக்கிறது என கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தங்க இருப்பு அதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அங்கு தங்கத்தை வெட்டியெடுக்கும் பணிகளை சீனா விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.