மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்? க்ரீன் சிக்னல் கொடுக்கும் இஸ்ரேல்.. அடுத்து என்ன நடக்கும்

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்? க்ரீன் சிக்னல் கொடுக்கும் இஸ்ரேல்.. அடுத்து என்ன நடக்கும்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்கா தீவிரமாக முயன்று வரும் நிலையில், அது சில நாட்களில் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் வருகிறது.

ஹிஸ்புல்லா: லெபனானை சேர்ந்த இந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் உடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முதற்கட்ட ஒப்புதலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்களில் இஸ்ரேலுக்குக் கவலை இருப்பதால் இந்த ஒப்பந்தம் எப்படி முடியும் என்பதில் தெளிவு இல்லாத சூழலே நிலவுகிறது.

அதேநேரம் அந்த குறிப்பிட்ட விவகாரங்களிலும் உடன்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும் வரை ஒப்பந்தம் இறுதியாகக் கருதப்படாது என்று அதிகாரிகள் பலரும் தெரிவித்தனர்.. போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியானதும் இஸ்ரேல் அமைச்சரவையும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கல்கள்: இந்த ஒப்பந்தத்தை தங்கள் எதிர்நோக்கிக் காத்திருந்தாலும் கூட இதில் இன்னுமே சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதைச் சரி செய்தால் மட்டுமே ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேவிட் மென்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவரம் அறிந்த சிலர் கூறுகையில், “தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை சரியான பாதையை நோக்கிச் செல்வது போலவே தெரிகிறது.. ஆனால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் தொடர்ந்து வருகிறது.. இந்த நேரத்தில் தவறான ஒரு நடவடிக்கை கூட பேச்சுவார்த்தையைத் தடம் புரளச் செய்துவிடும். இதனால் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

அமெரிக்கத் தூதுவர்: முன்னதாக அமெரிக்கத் தூதுவர் அமோஸ் ஹோச்ஸ்டீன் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஆய்வு செய்யக் கடந்த வாரம் தான் பெய்ரூட்டுக்கு சென்றிருந்தார். இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இறுதி முடிவு என்பதை இரு தரப்பும் இணைந்து தான் எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சிறந்த வாய்ப்பு.. அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

போர் நிறுத்தம்: போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு பக்கம் இருந்தாலும் இஸ்ரேல் ஹிஸ்புபல்லா இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. லெபனான் தலைநகர் மத்திய பெய்ரூட் மீது இஸ்ரேல் கடந்த சில நாட்களில் நடந்த வான்வழித் தாக்குதல்களின் 29 பேர் கொல்லப்பட்டனர், இதற்குப் பதிலடியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நைம் காசிம் பொறுப்பேற்றார். அமெரிக்கா வழங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்து, தங்கள் கருத்துக்களைச் சொல்லித் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் இறுதி முடிவு இஸ்ரேல் கைகளிலேயே இருப்பதாக நைம் காசிம் தெரிவித்தார்.