வெயங்கொட: இலங்கையில் புதையல் தோண்டி எடுக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுவந்ததால் இந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை அதிபராக ஏகேடி பதவியேற்ற ஆச்சரியமே இன்னும் அடங்கவில்லை. அதற்கு இலங்கையில் அடுத்த ஆச்சரியமான செய்தி ஒன்று கடந்த 2 நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. அப்படி என்ன செய்தி என்று கேட்கிறீர்களா? இலங்கையில் உள்ள வெயங்கொட பகுதியில் புதையல் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொக்லைன் எந்திரங்கள் மூலம் இங்கே அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் புதையல் தோண்டும் பணியை இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் உள்ளது இந்த வெயங்கொட பகுதி. இங்கே உள்ள வந்துராவாவில்தான் புதையல் இருக்கிறது என அதை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கின்ற ஊர்தான் வந்துராவா. இந்த நெடுஞ்சாலை கண்டிக்குச் செல்வதற்கானது. இங்கே பல ஆண்டுகளாகவே புதையல் இருக்கிறது என்று மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அதைத் தோண்டி எடுக்கவும் பலர் முயற்சி செய்துள்ளனர். புராணக் கதைகளின் அடிப்படையில் இந்தக் கதை மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. சட்டவிரோதமாகச் சிறு சிறு குழுக்கள் இங்கே புதையல் தோண்டும் வேலைகளில் ஈடுபட்டது சட்டவிரோதமானது எனக் கூறி அவர்களை நீதிமன்ற கைது செய்யவும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சிலர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இப்போது தண்டனைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்தான் பல ஆண்டுகளாக மக்கள் இங்கே புதையல் எடுக்க முயன்று வருவதால், நீதிமன்றம் இந்தப் பகுதியில் உண்மையில் என்னதான் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதிகாரிகளும் அதற்கான விசாரணையும் மேற்கொண்டனர். அங்கே திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதைகள் இருப்பதற்காக வாய்ப்புகள் இருக்கலாம் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பொதுமக்கள் முன்னிலையில் இந்தப் புதையல் தோண்டும் பணி மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர்.
நீதிமன்றம் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி இருந்த நிலையில் இடையில் மழைப் பொழிவு காரணமாக வேலைகள் தடைப்பட்டன. மேலும் கடும் பாறைகள் உள்ள பகுதி என்பதால் குழி தோண்டுவது மிகக் கஷ்டமானதாக இருந்துள்ளது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் பெரும் பாறைகளை உடைத்து புதையல் எடுக்கும் வேட்டையை அதிகாரிகள் 3 நாட்களாக நடத்தி வந்தனர். ஆனால், இந்தப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பே அகழ்வாராய்ச்சி துறை சார்ந்த அதிகாரிகள் இங்கே புதையல் இருப்பதற்கான வரலாற்று அடையாளங்கள் அல்லது தரவுகள் எதுவும் இல்லை என்று மறுத்திருந்த நிலையில் இப்படியை காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவினால் மேற்கொண்டனர்.
இலங்கை வரலாற்றில் இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு நடுவே ஒரு புதையல் வேட்டை நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. எனவே இதை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதி இலங்கை மக்கள் அங்கே குவிய தொடங்கிவிட்டனர். முதலில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி நாள் அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 3 நாட்களாக நடைபெற்ற பணிகளில் வெறும் பாறைகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு புதையல் கூட கிடைக்கவில்லை. அதைவிட வரலாற்றுப் பொருட்களோ அல்லது சின்னங்களோ கூட கிடைக்கவில்லை. இந்தப் புதையல் கிடைத்தால் இலங்கையின் பொருளாதாரமே மாறிவிடும். பல லட்சம் பில்லியன் பணம் வந்து குவிந்துவிடும் என ஏராளமான கட்டுக்கதைகள் கூட பேசப்பட்டு வந்தன.
நவீன உபகரணங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகுதான் இந்தப் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தற்போது நாடு இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இது தேவையற்ற செலவு என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். அதை உறுதிசெய்யும்படியாக இப்போது அங்கே ஒன்றுமே கிடைக்கவில்லை. முன்பே எதிர்க்கட்சிகள் எச்சரித்ததைப் போன்று மிகப்பெரிய அளவு அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 10 முதல் 15 மில்லயன் டாலர் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது என்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.