3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி

3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி

 

கீவ்: மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு பிறகு அமெரிக்கா, வட கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டை சுட்டிக்காட்டி பரபரப்பை பற்றவைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்யும். கடந்த 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமாக தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போர் சீக்கிரமாக முடிவுக்கு வரும் என்று கருதப்பட்டது. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் போர் முடிவுக்கு வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தனது பிரசாரத்தில் அமெரிக்க அதிபரானதும் வெறும் 24 மணிநேரத்தில் போரை நிறுத்திவிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் பேசினார். அதேபோல் டொனால்ட் டிரம்ப்புக்கு ரஷ்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்ததோடு, பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறினார். இதனால் போர் நிறுத்தம் சக்சஸ் ஆகும் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது உக்கிரமடைந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான் காரணம். அதாவது ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் உக்ரைனுக்கு உதவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் சார்பில் ஏவுகணைகள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஏவுகணையை ரஷ்யா மீது ஏவ தற்போது இருநாடுகள் அனுமதி வழங்கியது. இதையடுத்து உக்ரைனும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யாவும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை என்பது அணுஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் கொண்டது. இதன்மூலம் போரில் தலையிட்டால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக நாடுகள் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது.

இந்நிலையில் தான் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று உக்ரைனின் முன்னாள் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி வலியுறுத்துகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛3ம் உலகப் போர் தொடங்கிவிட்டது. ஏனென்றால் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா – அமெரிக்கா நேரடியாக தலையிடுகின்றன. இதனால் 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று நாம் முழுமையாக நம்ப முடியும். மேலும் வடகொரியா, ஈரான், சீனாவும் களமிறங்கி உள்ளது. வடகொரியா வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஈரானின் ஆளில்லா விமானங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதேபோல் சீனாவின் ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைனில் நுழைந்து ஈரானின் ஹவுதிகள் பொதுமக்களை கொன்று வருகின்றனர். இது போரின் பரந்துபட்ட நிலையை காட்டுகிறது.

அதோடு இது உக்ரைன் மீதான போரில் பிற நாடுகளின் தலையீட்டையும் வெளிக்காட்டும் வகையில் உள்ளது. உயர் தொழில்நுட்பங்கள் மூலம்எதிரிகள் தாக்கினாலும் அதனை உக்ரைன் தாங்கும். ஆனால் உக்ரைனுக்கு பிற நாடுகளின் ஆதரவு இல்லாதது மைனஸாக அமையலாம்” என்றார். இந்த கருத்தை தெரிவித்துள்ள வலேரி ஜலுஷ்னி யார் என்றால் உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி ஆவார். இவர் உக்ரைனின் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து கடந்த பிப்ரவரியில் நீக்கப்பட்டார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாட்டை தொடர்ந்து வலேரி ஜலுஷ்னி அந்தபொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.