சிட்னி: கென்யா அறிவித்ததை போல ஆஸ்திரேலியா அரசும் சர்ச்சைக்குரிய அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டில் மீண்டும் கலகக் குரல்கள் வெடித்துள்ளன. அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது.
அமெரிக்கா நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் கென்யா தமது நாட்டில் அதானி குழுமத்துக்கு கொடுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இதேபோல இலங்கையும் அதானி குழுமத்துக்கு இந்தியாவின் நெருக்கடியால் தந்த மன்னார் காற்றாலை திட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்துக்கு எதிரான கலகக் குரல்கள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதானி குழுமம், ஆஸ்திரேலியா பழங்குடி மக்களிடையே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. பழங்குடி மக்களின் நிலப் பகுதியில் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் பெற்றது அதானி குழுமம். உலகின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கம் இது. இதற்காக ரயில் பாதைகள் அமைக்கவும் துறைமுகங்களை சீரமைக்கவும் ஆஸ்திரேலியாவிடம் ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தது அதானி குழுமம். ஆனால் அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்க திட்டத்துக்கு ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் கடுமையாக தொடர் போராட்டங்களை நடத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் இணைந்திருந்தனர். அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலியா வங்கிகள் கடன் கொடுக்க மறுத்த நிலையில் இந்தியாவின் SBI வங்கி கடனுதவி வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவில் போராட்டங்கள் வெடித்திருந்தன.
இந்த பின்னணியில் தற்போது, இந்தியாவின் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷா. சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய ஒளி மின்சக்தி பெற்றுத் தரக் கூடிய மத்திய அரசின் SECI நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் செய்ய வைத்தார் அதானி; இந்த லஞ்ச விவகாரத்தை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ20,000 கோடி முதலீடு பெற்றார் அதானி என்பது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் அதானி உள்ளிட்டோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது என புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. இதனையடுத்து கென்யா தமது நாட்டில் அதானி குழுமத்துக்கு தந்த 2 முக்கியமான ஒப்பந்தங்களை அடியோடு ரத்து செய்துவிட்டது.
இதேபோல இலங்கையும் அதானி குழுமத்துக்கு இந்தியாவின் நெருக்கடியால் தந்த மன்னார் காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்யக் கூடும் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலும் அதானி குழுமத்துக்கு தந்த நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என குரல்கள் வலுத்து வருகின்றன. இதனால் உலகின் கவனம் ஆஸ்திரேலியாவின் பக்கமும் திரும்பி இருக்கிறது.