இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள்.. இறுதி சடங்கு செய்வதற்கு முன் கண் விழித்த இளைஞர்! ஷாக்

இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள்.. இறுதி சடங்கு செய்வதற்கு முன் கண் விழித்த இளைஞர்! ஷாக்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில், இளைஞர் ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், அந்த இளைஞர் உயிர்த்தெழுந்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர் ரோஹிதாஷ் குமார். இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். பெற்றோர் இல்லாத இவர் தனியாக காப்பகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக BDK மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. உயிரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால் நீண்ட போராட்டத்திற்கு பின்னர், அதிகாலை 2 மணி அளவில் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். இதனையடுத்து போலீசார் மேற்பார்வையில் உடல் இறுதி சடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளைஞர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் குப்பையில் வீசப்பட்டன. இளைஞரின் உடல் குளிப்பாட்டப்பட்டு இறுதி சடங்குக்கு தயார் செய்யப்பட்டது. இளைஞர் தங்கியிருந்த காப்பகத்திலிருந்து உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கட்டைகள் அடுக்கப்பட்டு இறுதி சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இறுதியாக கட்டையின் மீது இளைஞரின் உடல் வைக்கப்பட்டு எரியூட்ட தயார் செய்யப்பட்டது. உடல் தீ மூட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீரென இளைஞரின் உடலில் அசைவு தெரிந்தது. இதை பார்த்த போலீசார் இறுதி சடங்கை நிறுத்தி உடனடியாக இளைஞரை பரிசோதித்தனர். அப்போதுதான் இளைஞர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இளைஞர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்கட்டமாக மூன்று மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். வருவாய் துறை இயக்ககுநர் மற்றும் சமூக நீதித்துறை துணை இயக்குநர் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் சமீப காலமாகவே மருத்துவ தவறுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் இந்தியாவில் நடக்கும் மருத்துவ தவறுகள் குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ தவறுகள் குறித்து 50 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.