2024 ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில், யார் வென்றாலும், அவர்கள் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பது ஊர் அறிந்த உண்மை. இருந்தாலும் 4 பேர் களத்தில் உள்ளார்கள். தமிழ் பொது வேட்ப்பாளர் வெல்ல மாட்டார் என்றாலும் அவர், களத்தில் நிற்பது ஒரு சிறப்பு அம்சம். இன் நிலையில் யார் வெல்லப் போகிறார் ? யார் பின்னடைவைச் சந்திக்க உள்ளார் என்று ஆரயலாம் வாருங்கள்.
அரசியல் குழப்பங்கள், அதீத கடன்சுமை, தீராத பொருளாதார நெருக்கடி என அசாதரண சூழ்நிலையில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் இலங்கை தன்னை மீட்டெடுப்பதற்கான அதிபர் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக 2024 உள்ளது. இந்த நிலையில், 2024 நவம்பர் 17-ம் தேதியுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இலங்கை சட்டப்படி, அதற்கு முன்பாகவே அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டியது அவசியம். எனவே, 2024 செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள், சுயேட்சைகள் என சுமார் 38 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக 38 பேர் போட்டியிட்டாலும் அதில் ஒருவர்கூட பெண் வேட்பாளர் இல்லை என்பது கூடுதல் தகவல்.
இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தனை தலைவர்கள் போட்டியிட்டாலும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது என்கிறார்கள் இலங்கை அரசியல் வல்லுநர்கள்.
ரணில்:
இவர்களில், இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 19 ஆண்டுகள் கழித்து அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சுயேச்சையாகவே போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். `மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் கடந்த 2022-ல் இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு வகித்து, நாட்டையும் நாட்டுமக்களையும் மீட்டெடுத்த தனக்கே வாக்களிக்க வேண்டும்’ என பிரசாரம் செய்திருக்கிறார். அதேசமயம், `ராஜபக்சேக்களின் ஆசியுடனும், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் ஆட்சி நடத்தினார், மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறைந்ததே தவிர விலைவாசி உயர்வு, மின்கட்டணம் எதுவும் குறைந்தபாடில்லை’ என ரணில் விக்ரம சிங்கே மீதான விமர்சனங்களும் நீடிக்கின்றன.இதனால் இவரது வெற்றி என்பது உறுதிசெய்யப்படவில்லை. 3ம் நிலையில் தான் இருக்கிறார்.
சஜித் பிரேமதாச:
அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வலுவான வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியிருந்த சஜித் பிரேமதாசா, கடந்த 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து களம்கண்ட இரண்டாவது இடம் பிடித்தார். தற்போது இரண்டாவது முறையாக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சஜித், `எனக்கு வாக்களித்தால் எல்லோருக்குமான வளர்ச்சியைக் கொடுப்பேன், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்’ எனக்கூறி வாக்கு சேகரித்திருக்கிறார். இவருக்கு, ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இவர் 2ம் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் சொல்லப் போனால் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படும் அனுராவுக்கும் இவருக்கு இடையே சொற்ப அளவில் தான் வித்தியாசம் உள்ளது. எனவே நிலமை மாறலாம்.
அனுரகுமார திசநாயக்க
ஜனதா விமுக்தி பெரமுன சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கும் அனுரகுமார திசநாயக்க, கடந்த 2019 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஜே.வி.பி எனும் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியானது இலங்கை வரலாற்றில் சிங்களப் பேரினவாதக் கட்சியாக அடையாளம் காணப்படுகிறது. 80-களில் ஆயுதம் தாங்கிய தீவிரவாத இயக்கமாக செயல்பட்டுவந்த ஜே.வி.பி, அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்துவந்தது. மார்க்சியம் – லெனினியம் என்ற இடதுசாரிக் கருத்தியலைப் பேசினாலும் அடிப்படையில் சிங்கள இனவாத கட்சியாகவே செயல்பட்டுவந்தது. தற்போது ஜே.வி.பி தலைவராக இருக்கும் அனுரகுமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின்கீழ் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். `ஊழல் ஆட்சிகளுக்கு எதிராகப் போராடுவேன், ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்’ என தேர்தல்களத்தில் ஒலித்திருக்கிறார். இவருக்கு அதிக ஆதரவு இருப்பதால் தற்போதைய கருத்துக் கணிப்பின் படி, அனுரா முன் நிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமால் ராஜபக்ஷ
இவர்கள் தவிர மற்ற வேட்பாளர்களின் செல்வாக்கு என்பது பெரிய அளவில் இல்லை என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சொந்தக் கட்சியினரின் ஆதரவே முழுமையாக கிடைக்கவில்லை; பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாலும், ஏற்கெனவே இலங்கை பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தை விரட்டியடித்திருப்பதாலும் இந்தத் தேர்தலில் செல்வாக்கு குறைந்த நபராகவே நமல் ராஜபக்சே பார்க்கப்படுகிறார். தேர்தல் களத்திலும்கூட `தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கக்கூடாது’ என்ற பழைய இனவாத பேச்சையே பேசிவந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.