இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் பாகிஸ்தான், சீனாவின் உதவியுடன் தனது ராணுவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய இருக்கிறது. இதன் மூலம், டெல்லி மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
பாகிஸ்தான், சீனா உறவு: தொடக்க காலத்தில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான உறவில் நீடித்திருந்தது. ஆனால் இப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு வலுவடைந்திருக்கிறது. மறுபுறம் அமெரிக்காவின் இஸ்லாமியா ஃபோபியாவில் தீவிரமாக இருப்பதால், அந்நாட்டை கழற்றிவிட்டுவிட்டு, சீனாவுடன் கை கோர்த்திருக்கிறது. இந்த கூட்டணிதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
ஆயுத சப்ளை: பாகிஸ்தானுக்கு சீனா நீர்மூழ்கி கப்பல் தொடங்கி, ஏவுகணைகள் வரை ஏராளமான ஆயுதங்களையும், போர் கருவிகளையும் சப்ளை செய்து வருகிறது. குறிப்பாக DF-21 மற்றும் CM-400AKG ரக ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது. இந்த ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் இலக்கை தாக்கும். இதன் ரேஞ்ச் 240 கி.மீ தொலைவு. Type 039 வகை நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா வழங்கியிருக்கிறது. இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் சுமார் 14,816 கி.மீ தொலைவு வரை பயணிக்க கூடியதாகும். லாகூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வெறும் 3,136 கி.மீதான். அப்படியெனில் இது நிச்சயம் இந்தியாவுக்கு ஆபத்துதான். போர் விமானங்கள்: ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் வரிசையில் போர் விமானங்களையும் சீனா வழங்கியுள்ளது. தற்போது பாகிஸ்தான் வசம் சீனாவின் Chengdu J-10 மற்றும் JF-17 Thunder என இரண்டு போர் விமானங்கள் இருக்கின்றன. இதில் J-17-ஐ விட J-10 கொஞ்சம் அட்வான்ஸ் டெக்னாலஜியை கொண்டிருக்கிறது. இது இந்தியா வசம் உள்ள சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ விமானங்களை விட திறன் வாய்ந்ததுதான். ஆனால், நம்மிடம் ரஃபேல் விமானம் இருக்கிறது. எனவே பயம் இல்லை.
புதிய விமானங்கள்: ஆனால், 5ம் தலைமுறை நவீன ரக விமானங்களை விரைவில் பாகிஸ்தான் வாங்க இருக்கிறது. இதுதான் இந்தியாவுக்கு இப்போது இருக்கும் பெரிய அச்சுறுத்தல். ஏனெனில் இந்தியா வசம் இந்த வகை விமானங்கள் இல்லை. இதை கருத்தில் கொண்டுதான் பாகிஸ்தானுக்கு சீனா இந்த விமானங்களை கொடுக்க முன்வந்திருக்கிறது.
J-35A என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வகை விமானங்கள் ஒலியை விட 1.8 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது. இதே வேகத்தில் 2000 கி.மீ தூரம் வரை பறக்கும். ஒரு வேளை இந்த விமானங்கள் லாகூரில் நிலை நிறுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏதாவது உரசல் ஏற்படும்போது அங்கிருந்து வெறும் 450 கி.மீ தொலைவில் உள்ள டெல்லியை இந்த விமானங்கள் வெறும் 30 நிமிடங்களில் தாக்கி அழிக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் 40, J-35A ரக போர் விமானங்களை சீனாவிடமிருந்து வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கிறது. இப்போதிருக்கும் ஆறுதல் செய்தி என்னவெனில், விமான கொள்முதல்கள் நடக்க 2 ஆண்டுகள் வரை ஆகும் என்பதுதான். மட்டுமல்லாது இந்த கொள்முதல் குறித்து அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் இன்னும் போடப்படவில்லை.
உலகம் முழுவதும் இப்போதுவரை வெறும் மூன்று நாடுகள்தான் 5ம் தலைமுறை விமானங்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா Lockheed Martin F-22 Raptor மற்றும் Lockheed Martin F-35 Lightning II என இரண்டு விமானங்களை கொண்டிருக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா சுகோய் Su-57 என்கிற பெயரிலும், சீனா Chengdu J-20, J-35A என்கிற பெயரிலும் 5ம் தலைமுறை விமானங்களை வைத்திருக்கிறது. இந்த வகை விமானங்கள் ரேடாரில் சிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.