வர்ஷா: பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில் நெதன்யாகு போலந்து செல்ல இருக்கிறார். ஒருவேளை அவர் போலந்து வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று அந்நட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சத்தை எட்டியது. காரணம் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்தான். சுதந்திர பாலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஹமாஸ் தாக்குதலை நடத்தியிருந்தது. இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்று இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை தொடுத்தது. இந்த போருக்கு அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்த ராணுவ உதவிகளையும் செய்தது. எனவே போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே வந்தது. இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் ராணுவம் போட்டு தள்ளியது. போர் தொடங்கியபோது இஸ்ரேல், ஹமாஸ் தலைவரை அழிப்பதுதான் நோக்கம் என்று கூறியிருந்தது. எனவே போர் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி நடக்கவில்லை. போர் இத்துடன் முடியப்போவதில்லை என்று நெதன்யாகு அறிவித்தார். போர் காரணமாக பாலஸ்தீனத்தில் ராணுவ வீரர்கள் தவிர, 45,259 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த உயிரிழப்புகள் உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களை தூண்டின. அமெரிக்காவிலேயே போராட்டங்கள் தீவிரமடைந்தன. மறுபுறம் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு பல நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பின்படி நெதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை கைது செய்ய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளில்தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இஸ்ரேல் இதில் உறுப்பினர் கிடையாது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூட உறுப்பினர்களாக இல்லை. எனவே, இந்த நாடுகளுக்கு நெதன்யாகு போகும் போது அவர் கைது செய்யப்பட மாட்டார். இதே சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு சென்றால் கைதாக வாய்ப்பு இருக்கிறது. அடுத்த சில நாட்களில் நெதன்யாகு போலந்து செல்ல இருக்கிறார்.
அங்கு ஆஷ்விட்ஸ் விடுதலையைக் குறிக்கும் முக்கிய நிகழ்வில் அவர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்டது. போலந்து சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு சென்றால் நெதன்யாகு கைதாகலாம் என்று பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக, போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், “நெதன்யாகு எங்கள் நாட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்” என்று கூறியிருக்கிறார். எனவே இந்த நிகழ்வில் அவர் பங்கேற்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் அதிபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, கைது நடவடிக்கைக்கு பயந்து நெதன்யாகு பங்கேற்காமல் தவிர்த்தால் அது அவருக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.