அக்தா: கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தின் அருகே அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்தனர். இதில் 42 பயணிகள் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக நெஞ்சை பதற வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யா கூட்டமைப்பின் உட்குடியரசு நாடாக உள்ள செச்சனியாவின் தலைநகர் குரோசனி நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் என்று மொத்தம் 72 பேர் பயணித்தனர். இந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் இயக்குவதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறங்க சென்றது. அக்தா விமான நிலையத்தின் அருகே அசென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
அக்தா விமான நிலையத்தை அடைய 3 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் பயணித்த 72 பேரின் கதி என்ன? என்பது உடனடியாக தெரியாமல் இருந்தது. தற்போது இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 67 பயணிகளில் 42 பேர் பலியாகி உள்ளனர்.11 வயது சிறுவன், 16 வயது சிறுமி உள்பட 25 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்
விமான பணியாளர்கள் பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே தான் விமானம் தரையிறங்க முயன்றபோது தரையில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் விமானம் வானில் இருந்து ஒரே சீராக தரையிறங்காமல் அசைந்து அசைந்து வந்து தரையில் மோதி தீப்பிடித்ததும் பதிவாகி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அந்த விமானம் வானில் பறந்தபோது மோசமான வானிலை நிலவி உள்ளது. அதிகப்படியான பனிமூட்டத்தால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை அவசரமாக இயக்க விமானிகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு பிறகு தான் விமானம் அவசர தரையிறக்கத்துக்கு தயாராகி உள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் விமானத்தில் வேறு ஏதாவது இன்ஜின் உள்ளிட்ட பிற இயந்திர கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.