அக்தா: அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா புறப்பட்ட அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தான் நாட்டில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதில் பயணித்த பயணி ஒருவர் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதேபோல் விமானம் விபத்துக்குள்ளான பிறகும் விமானம் உள்ளே பயணிகள் படுகாயத்துடன் கிடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று காலையில், ரஷ்யாவின் குரோசானிக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் அஜர்பைஜானை சேர்ந்த 37 பேர், ரஷ்யாவை சேர்ந்த 10 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 6 பேர், கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பேர் உள்பட 67 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
விமானிகள், ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கஜகஸ்தான் நாட்டின் வான் பகுதியில் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானி இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமான விபத்து
ஆனால் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து என்ன தகவல் விமானிக்கு கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அக்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானம் கீழ் நோக்கி பறந்தது. அப்போது விமானம் தரையிறங்கும் போது கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியானதாக தகவல் வெளியாகியது.
முன்னதாக இது தொடர்பான வெளிப்புறத்தில் பதிவான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின. அதில் விமானம் திடீரென சர்ரென கீழே இறங்குகிறது. பின்னர் மீண்டும் நிலையாக பறக்கிறது. பின்னர் மீண்டும் திடீரென சர்ரென கீழே இறங்கி கடைசியில் தரையில் விழுந்து தீப்பிடிப்பது போல் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் பரவி விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.