சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்கள் – கார் தீக்கிரை

சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்கள் – கார் தீக்கிரை

 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் கார்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்களை எழுதி சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டு தலம் சேதமாக்கப்பட்டதால் உண்டான பதற்றநிலை நீடிக்கின்ற நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சிட்னியின் வுலஹராவின் புறநகர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்னேவீதிக்கு தாங்கள் அழைக்கப்பட்டதாகவும் அங்கு சென்றவேளை கார் ஒன்று எரிந்துகொண்டிருப்பதை பார்த்தாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் அருகில் இஸ்ரேலை கொலை செய்யுங்கள் என எழுதப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றவேளை அந்த பகுதியில் காணப்பட்ட 15 முதல் 20 வயதிற்குற்பட்ட இருவர் மீது சந்தேகம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் மதில் மீதும்அருகிலும் அவர்கள் எழுதிச்சென்றுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு வாசகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.