டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நெருக்கடியை அந்த நாடு சந்தித்துள்ளது. மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தெக்னாப் பிராந்தியத்தில் சில பகுதிகளை ஆர்கன் கிளர்ச்சிக்குழு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவமான பகுதி என்பதால் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த போராட்டத்தில் வன்முறையும் வெடித்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் வங்கதேசபிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
புது தலைவலி: வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. வங்கதேசத்தில் அண்மைக்காலமாக இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் வங்கதேச நாட்டிற்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஆர்கன் ராணுவம்: அதாவது வங்கதேச – மியான்மர் எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்கன் ராணுவம் (AA) என்ற கிளர்ச்சிக்குழு வங்கதேசத்தின் தெக்னாப் பிராந்தியத்தில் சில முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஹிங்கியா அகதிகள் முகாம் மற்றும் வங்கதேசத்தின் பிரபலமான செயின் மார்டின் தீவுப்பகுதி அருகே இந்த பிராந்தியம் அமைந்துள்ளதால் வங்கதேசத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு இடமாக உள்ளது.
எல்லையை கைப்பற்றிய கிளர்ச்சிக்குழு: பதற்றமான பகுதியாகவும் இந்த இடம் இருக்கும் நிலையில், ஆர்கன் ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. வங்கதேசத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எல்லைப்பகுதிகளில் வங்கதேச ராணுவத்திற்கும் ஆர்கன் கிளர்ச்சிக்குழுவிற்கும் இடையே பயங்கர துப்பாகிச்சண்டை நடைபெற்றதாகவும் இதன் தொடர்ச்சியாகவே கிளர்ச்சிக்குழு அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது தொடர்பாக வங்கதேச அரசு இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வங்கதேசத்துக்கு சவால்: ஆர்கன் ஆர்மி கிளர்ச்சிக்குழு மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் பெரும்பாலான இடத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது வங்கதேச எல்லைப்பகுதிகளை கிளர்ச்சிக்குழு கைப்பற்றியிருப்பது வங்கதேச இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மவுங்டாவ் உள்ளிட்ட சில இடங்களை ஆர்கன் ஆர்மி கைப்பற்றிய நிலையில் தற்போது மிகவும் ஆக்ரோஷமாக கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்கான் துறவி: ஆர்கன் ஆர்மி கிளர்ச்சிக்குழுவின் எழுச்சிக்கு பின்னால் அண்டை நாடுகளின் ஆதரவும் இருப்பதாகவும் சர்வதேச நோக்கர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. ஏற்கனவே, இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு முன்பு போல சுமூகமாக இல்லை. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்கான் துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். பெரும் நெருக்கடி: இந்த விவகாரத்தால் இரு தரப்பு உறவு மேலும் பாதித்தது. வங்கதேச அரசிடம் இந்தியா தனது கவலையையும் தெரிவித்தது. வங்கதேசம் பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் வங்கதேசத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் தான் வங்கதேசத்தின் மிக முக்கியமான பகுதி ஒன்றை கிளர்ச்சிக்குழு கைப்பற்றியிருப்பது அந்நாட்டிற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. A