ஒட்டாவா: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி மோதலில் ஈடுபட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் லிபரல் கட்சியை சேர்ந்தவர். ஜஸ்டின் ட்ரூடோ நம் நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அதோடு ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை நம் நாட்டின் மீது கூறி வருகிறார். இதற்கு நம் நாடும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது
இந்நிலையில் தான் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளார். அதோடு அடுத்த ஆண்டு கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்.
இவருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையே மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கனடா பொருளாதாரம் தொடர்பான கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். தற்போது அவரது சொந்த கட்சியினரே எதிராக கிளம்பி உள்ளனர். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போதைய சூழலில் முன்கூட்டியே தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாக என்ற தகவல் வெளியாகி உள்ளது. துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது கேபினட் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களிடம் அதுபற்றி விரிவாக விவாதித்துள்ளார். தற்போது தனக்கு எதிரான நிலவும் மக்களை சமாதானப்படுத்தவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவை பெறும் திட்டத்தில் அவர் பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு லிபரல் கட்சி எம்பிக்களின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் கதவுகள் மூடப்பட்டு ரகசியமாக நடத்தப்பட்டது. இந்த மூடப்பட்ட அறையில் நடந்த கூட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று இந்த கருத்தை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மேலும் வணிகம் தொடர்பான பாலிமார்க்கெட் பிளாட்பார்ம் கூறுகையில், ‛‛ஜஸ்டின் ட்ரூடோ 80 சதவீதம் வரை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போது அவரது கட்சிக்குள்ளேயே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக குரல்கள் வலுக்க தொடங்கி உள்ளது” என கூறியுள்ளது. அதேபோல் சி டிவி நியூஸ் சார்பி்ல, ‛‛ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது அல்லது நாடாளுமன்றத்தை கலைக்காமல் கூட்டத்தொடரை நடத்தாமல் ஒத்திவைக்கலாமா? என்பது பற்றி யோசித்து வருகிறார். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்று அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.