ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு!

ராஜஸ்தானில் 150 அடி ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் 55 மணி போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான்.

ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதையடுத்து மாலை 4 மணியவில் அங்கு மீட்புப் பணிகள் தொடங்கின. சிறுவன் 150 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. புல்டோர் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி அந்த துளைக்கு அருகில் மீட்புக் குழுவினர் சுரங்கம் தோண்டத் தொடங்கினர். மேலும் கயிறு மற்றும் பிற சாதனங்களை பயன்படுத்தி சிறுவனை மீட்க முயன்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2023-ல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தை குடை தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டது. அந்த தொழில்நுட்பமும் இங்கு பயன்படுத்தப்பட்டது. சிறுவனுக்காக ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. கேமரா மூலம் சிறுவனின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 55 மணி நேர போராட்டத்துக்கு சிறுவன் ஆர்யன் ஆள்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அந்த சிறுவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா “நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆழ்துளை கிணற்றை மூடுவது தொடர்பாக அரசின் உத்தரவு உள்ளதே தவிர, அது தொடர்பாக சட்டம் இல்லை. எனவே இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார்.

ராஜஸ்தானின் இதே தவுசா மாவட்டத்தில் கடந்த செப்டம்பரில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுமி தவறி விழுந்தாள். 28 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அச்சிறுமி 18 மணி நேர மீட்புப்பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள்.