ஆதவ் சொன்னது 100% பொய்? சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? உடைத்து பேசிய தயாரிப்பாளர்

ஆதவ் சொன்னது 100% பொய்? சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? உடைத்து பேசிய தயாரிப்பாளர்

சென்னை: சினிமா துறையை ஒரு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அவரது பேச்சு 100% பொய்யானது என ஒரு தயாரிப்பாளர் மறுத்துப் பேசி இருக்கிறார்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசிய பல கருத்துகள் திமுகவை நேரடியாக அட்டாக் செய்திருக்கிறது. அவர், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற அர்த்தத்தில் பேசி இருந்தார். அதாவது, “நான்கு ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு துறை ஏன் ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது? ஏன் சினிமா துறை ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது?” என்று பேசினார்.

திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் சினிமா துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்தில் திமுக ஆதரவு தொலைக்காட்சியான ஒரு நிறுவனம் சினிமா துறையைக் கட்டுப்படுத்தி வருவதாகப் பேச்சுக்கள் எழுந்தன. குறிப்பாக 2000 வரை அப்படியா ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. புகழ் மிக்க அந்தத் தொலைக்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருப்பதால் குறைந்த விலைக்கு நிர்ப்பந்தமாகப் படங்களை விற்க வேண்டி இருக்கிறது என சினிமா மேடைகளில் பலர் பேசி இருக்கிறார்கள்.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக் காலப் போக்கில் காணாமல் போய்விட்டது. படங்களை அந்தத் தொலைக்காட்சி வாங்குவதைக் குறைத்த போது சினிமா தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் படங்களை விற்க முடியாமல் தவித்தனர். அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகள் முன்னர் ஓடிடி தளம் புதியதாக உள்ளே புகுந்தது. பல படங்களை ஓடிடி மூலம் நல்ல விலைக்கு வாங்கினர். பல கோடிகள் நஷ்டமானதால் ஓடிடி நிறுவனங்கள் திரையரங்கத்தில் படம் வெளியான பிறகு அதன் வரவேற்பைப் பார்த்து படங்களை விலை பேசத் தொடங்கின. இப்போது ஓடிடி தளமும் சினிமாவுக்கு வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. பல தயாரிப்பாளர்கள் படங்களை விற்க முடியாமல் தவிக்கின்றன.

விற்பனை விசயத்தில் இப்படி என்றால் விநியோக விசயத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. சொல்லப் போனால் பல சிறிய படங்களைப் பல விநியோகிஸ்தர்கள் வாங்க முன்வருவதே இல்லை. பெரிய படங்களை மட்டுமே வாங்க ஆர்வம் காட்டுகின்றன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கூட இப்போது படங்கள் விநியோகம் செய்வதைக் குறைக்க தொடங்கி விட்டது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன். அவர், “விஜய் நடித்த கோட் படத்தை வெளியிட்டது யார்? ரெட் ஜெயண்ட் வெளியிடவில்லையே? ரோமியோ பிக்சர்ஸ் வெளியிட்டது. புஷ்பா 2 மிகப்பெரிய படம். அதை யார் வெளியிட்டார்கள். இல்லையே? ஏஜிஎஸ் வெளியிட்டது. பல வெற்றி பெற்ற படங்களை ரெண்ட் ஜெயண்ட் வெளியிடவே இல்லை. சினிமா துறையைப் பற்றி எதுவுமே தெரியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ஆதவ் அர்ஜுனா அடிப்படை ஆதாரமே இல்லாத ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்” என்கிறார்.

அதாவது ரெட் ஜெயண்ட் வந்த பிறகுதான் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது என்றும் இந்த நிறுவனம் விநியோகித்த படங்கள் இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் சரியான பங்குத் தொகையைக் கணக்குப் பார்த்து முறையாக ஒப்படைக்கத் தொடங்கியது என்றும் தனஞ்செயன் நியாயப்படுத்தி இருக்கிறார். சினிமா துறை திமுக ஆட்சி மட்டும் இல்லாமல் அதிமுக ஆட்சியிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு விஜய் ‘தலைவா’ படமே சாட்சி. அதில் இடம்பெற்ற ‘சரியான நேரத்தில் வழிநடத்துவேன்’ என்ற ஒரு வாசகத்திற்காகப் படம் வெளிவர முடியாமல் முடக்கப்பட்டது. அதற்காக விஜய் வீடியோ வெளியிட்டுப் பேசிய சம்பவம் நடந்தது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் வெளியாக முடியாமல் முடக்கப்பட்டதற்குப் பின்னால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா இருப்பதாகக் கூறப்பட்டது. கமல்ஹாசன் இதற்காக ‘நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என்று பேசி இருந்தார். அதேபோல் ‘பாசத் தலைவனுக்குப் பாராட்டு’ விழா எனக் கருணாநிதிக்கு சினிமா துறை விழா எடுத்த போது அஜித் தங்களை மிரட்டி அழைத்து வந்ததாகச் சொல்லப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா கலந்து கொண்ட விழாவில் ரஜினிக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனப் பேச்சுகள் எழுந்தன.

ஆக, திரைப்படம் துறை அதிமுக திமுக ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது. ஆனால், ஆதவ் அர்ஜுனா சொல்வது போல் ஒரு நிறுவனத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற வாதம் 100% பொய்யானது என்கிறார் தனஞ்செயன். குறிப்பாகப் பல படங்களில் நடத்த கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை உதயநிதியின் நிறுவனம் தான் விநியோகம் செய்தது. அவரே அந்த நிறுவனம் எந்தளவுக்குப் பங்குத் தொகையை தியேட்டர்களிடம் இருந்து விரைவாகப் பெற்று தயாரிப்பாளருக்கு வழங்குகிறது என்பது சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். தொடர்ந்து தனஞ்செயன் கூறுகையில், “தொழில் நல்ல கணக்கு வழக்கை கடைப்பிடிப்பதால்தான் நான் உட்படப் பலரும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை விரும்பி செல்கிறோம். இப்போது பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட்டு உதவும்படி கேட்டாலும் ரெட் ஜெயண்ட் வேண்டாம் எனத் தவிர்க்கிறார்கள். அவர்களால் பல படங்களை வெளியிட முடியவில்லை. அதுதான் உண்மை” என்கிறார்.