தப்பாகி போன கணக்கு.. சிரியா கலகத்திற்கு ஈரான் தான் முழு காரணம்.. இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டு

தப்பாகி போன கணக்கு.. சிரியா கலகத்திற்கு ஈரான் தான் முழு காரணம்.. இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டு

டெல் அவிவ்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் இப்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிரியா அதிபர் ஆசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே சிரியா உள்நாட்டு மோதல் தொடர்பாக இஸ்ரேல் தூதர் சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் இப்போது திடீரென உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், அதிபராக இருந்த ஆசாத் அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.

வெறும் சில நாட்களில் சிரியாவில் நிலைமை மொத்தமாக மாறியிருக்கிறது. இதனால் ஹெடிஎஸ் அமைப்பினர் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், பின்னணியில் வேறு நாடுகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிரியா மோதல்: இதற்கிடையே சிரியாவில் இப்போது நடக்கும் மோதலுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இல்லை என்றும் சிரியா விவகாரத்தில் ஈடுபடவும் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் இஸ்ரேல் தூதர் ருவன் அசார் குறிப்பிட்டார். அதேநேரம் சிரியாவில் இருந்து வரும் எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கூறினார். இது தொடர்பாக இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கூறுகையில், “சிரியாவில் இப்போது நடக்கும் விஷயங்களுக்கு முக்கிய காரணம் ஈரானின் தவறான கணக்கீடுகள் தான். ஈரான் போட்ட தவறான கணக்குகளே சிரியாவில் இப்போது நடக்கும் விஷயங்களுக்குக் காரணமாகும். இங்கே மத்திய கிழக்கில் ஈரான் இப்போது தனது அனைத்து தொடர்புகளையும் இழந்துவிட்டன.

தப்பாகிப் போன கணக்குகள்: ஈரான், ஹிஸ்புல்லா ஆகியவற்றின் கணக்குகள் தப்பாகப் போய்விட்டது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதனால் ஹிஸ்புல்லா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.. அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உட்பட பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியது.. இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கடுமையாகப் பதிலடி கொடுத்தது. இன்று நீங்கள் என்ன நடக்கிறது எனப் பார்த்தால்.. இந்த பிராந்தியத்தில் ஈரானின் தொடர்புகள் அனைத்தும் கட்ஆகிவிட்டன. ஈரான் வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாகவே சிரியாவில் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன.

இதுதான் காரணம்: அதாவது இஸ்ரேலுடன் தேவையில்லாமல் ஈரான் மோதியதே இந்த குழப்பத்திற்குக் காரணமாகும். அதேநேரம் இதில் எந்த விதத்திலும் இஸ்ரேலுக்குத் தொடர்பு இல்லை. சிரிய மோதலில் இஸ்ரேல் ஈடுபடவில்லை. நாங்கள் சிரிய அரசியலில் ஈடுபட விரும்பவும் இல்லை. இது சிரியாவின் உள்நாட்டு விஷயம். இது சிரிய மக்கள் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம். அதேநேரம் எங்களுக்கு எதாவது ஆபத்து வந்தால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் இப்போது எச்சரிக்கையாக இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. சிரியாவில் நடக்கும் நிகழ்வுகளை நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சிரியா எல்லையில் உள்ள எங்கள் பாதுகாப்புப் படை கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பில் உள்ளனர். எல்லையில் கவனம்: யோம் கிப்பூர் போரைத் தொடர்ந்து 1974ஆம் ஆண்டு எல்லையில் பாதுகாப்பு மண்டலம் ஏற்படுத்தப்பட்டது. இது சில நூறு மீட்டர்கள் முதல் கிலோமீட்டர்கள் வரை இருக்கும். கடந்த காலங்களில் இந்த கூட எல்லை மண்டலத்தில் கூட தாக்குதல் நடந்துள்ளன. ஐநா அமைதிப் படை மீதும் தாக்குதல் நடந்துள்ளன. அப்போது நாங்கள் தான் உதவிக்குச் சென்றோம். இப்போதும் எல்லையில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்றார்.