தமிழ் திரையுலகில் தனது தனி திறமையின் மூலம் பல நடிக, நடிகைகள் கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு என கால் பதித்த போதும் புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்லாமல் இடம் கொடுக்கும் பாங்கு தமிழ் சினிமாவின் சிறப்பான விருந்தோம்பலே.
புதிதாக வருபவர்கள் தங்களது பங்களிப்பின் மூலமாகவும் திறமையின் மூலமாகவும் தனக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவரவர் சாமர்த்தியம். கடந்த ஆண்டு வெளியான டாடா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கணேஷ்கே பாபு.
பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி நடிகர்கள் இணைந்தால் மட்டுமே அதிக வசூல் என்ற எழுதப்படாத சூத்திரத்தை மாற்றி அமைத்து, குறைவான பட்ஜெட், வளர்ந்து வரும் நடிகர், சிந்திக்க வைக்கும் வசனங்கள் என தமிழ் சினிமாவை புதிய பரிமாணத்துடன் ஜொலிக்க வைத்தார் இயக்குனர் கணேஷ் கே பாபு.
கவின் நடித்த டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைந்த இயக்குனரை அதே லைக்கா நிறுவனம் விடாமல் கொக்கி போட்டு இழுத்தது. தமிழ் சினிமாவிற்கும் காவல்துறைக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது போல் ஏற்கனவே காவல்துறை அதிகாரியின் மகனான சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகின்றோம் அதேபோல் மற்றும் ஒரு வரவாக இப்படத்தின் நாயகியாக புதுமுக நடிகை தவ்தி ஜிவால் ஒப்பந்தமானார். இவர் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியான Director General of Police (DGP) சங்கர் ஜிவாலின் மகள் ஆவார்.
கணேஷ் கே பாபுவின் துருவ்விக்ரம் உடனான இரண்டாவது படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த படத்திற்காக ஜீவாவுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர். இந்த படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட தவ்தி ஜிவாலை ஜீவா உடன் ஜோடி சேர்த்துள்ளார் இயக்குனர். ஜீவாவின் இப்படம் வளர்ந்து வரும் கவினின் அடுத்த படத்துடன் போட்டி போடுவதாக தெரிகிறது.
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்க உள்ள இவர், ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஒரு ஆல்பம் சாங்கில் நடனமாடியுள்ளார். கலையின் மீது உள்ள ஆர்வத்தால் களமிறங்கும் தவ்தி ஜிவால் வெற்றி பெற வாழ்த்துக்கள்.