அசாம் திப்ரூகர் விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள அரிய மீன்கள் பறிமுதல்

அசாம் திப்ரூகர் விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள அரிய மீன்கள் பறிமுதல்

அசாம் மாநிலம் திப்ரூகர் விமான நிலையத்தில் அரிய வகை வண்ண மீன்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதை அறிந்து வனத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 2 பேரை சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் அரிய வகை ‘சன்னா பார்க்கா’ என்ற மீன்கள் இருந்தது தெரிய வந்தது. அவர்களில் இருந்து மொத்தம் 500 மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.4.5 கோடி. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள குஜ்ஜான் பகுதியை சேர்ந்த ஸ்ரீதன் சர்க்கார், ஜிதேன் சர்க்கார் ஆகிய இருவரிடம் இருந்து அரிய வகை வண்ண மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், உள்ளூர் மக்களிடம் கிலோ ரூ.400 என்று பேரம் பேசி மீன்களை வாங்கி உள்ளனர். பின்னர் அவற்றை கொல்கத்தாவுக்கு கடத்திச் சென்று அங்கிருந்து மலேசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இந்திய சந்தையில் உயிருடன் உள்ள சன்னா பார்க்கா வகை மீன் ஒன்று ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இவ்வளவு மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட இருந்த மீன்களை பறிமுதல் செய்ததற்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டு தெரிவித்தார்.