இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு எழுதி தீ மற்றும் அறிவு நடுத்த தனியிசை பாடலான ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த பாடல் கிட்டத்தட்ட 50 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாடல் மூலம் தங்களுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட வருமானமாகக் கிடைக்கவில்லை என சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த பாடலை ஏ ஆர் ரஹ்மான் ஆலோசகராக செயல்பட்ட மஜ்ஜா ஸ்டுடியோ யுடியூபில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் மேல் விமர்சனங்கள் எழ அவர் அதற்கு விளக்கமளித்திருந்தார். அதில் “நான் மஜ்ஜா ஸ்டுடியோ நிறுவனத்தில் பங்குதாரர் இல்லை. எந்தவொரு பொருளாதார ஆதாரத்திற்காகவும் நான் அவர்களோடு இணைந்து பணியாற்றவில்லை. அவர்கள் தமிழ் பாடல்களை பிரபலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அதில் ஆலோசகராக இருந்தேன். நான் பரிந்துரைத்த பல பாடல்கள் எப்போதோ அவர்களின் சேனலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன” என விளக்கமளித்திருந்தார்.
இதையடுத்து சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ஏ ஆர் ரஹ்மான் சார் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எங்களைப் போலவே அவரும் இந்த விஷயத்தில் போலியான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளார். நான் உட்பட யாருமே இந்த பாடலுக்காக எந்தவொரு வருவாயையும் பெறவில்லை. ஆனால் மிரட்டும் வகையிலான மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சுயாதீன கலைஞர்களுக்கான வருவாயை பெறுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். அதற்காக சீக்கிரம் ஒரு முன்னெடுப்பை தொடங்கவுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.