இயக்குனர் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தனது தயாரிப்பாளர் குறித்து அவர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:
போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக் என்ற தயாரிப்பாளரின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் அமீர். அவர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் அந்த விளக்கத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை தற்போது பார்ப்போம்.
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!
கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் ’இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.
அந்த வகையில், சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்பதைத் தெரிவித்து கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்.