ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்கெட்டில் பகீர்.. 7 இந்தியர்கள் காயம்.. நள்ளிரவில் என்ன நடந்தது? திக்திக்

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்கெட்டில் பகீர்.. 7 இந்தியர்கள் காயம்.. நள்ளிரவில் என்ன நடந்தது? திக்திக்

 

பெர்லின்: ஜெர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் மார்கெட்டில் மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அங்குத் திரண்டிருந்த மக்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 200+ காயமடைந்தனர். இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்தில் இந்தியர்களும் காயமடைந்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

உலகமே இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ரெடியாகிவிட்டது. கிறிஸ்துமஸுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில், மக்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகள் உடன் அலங்காரம் செய்து வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்: மேலும், கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கும் கூட களைகட்டியுள்ளன. பெரும்பாலான சர்வதேச நகரங்களில் சிறப்பு மார்கெட்கள் அமைக்கப்படும். இதன் மூலம் மக்கள் எளிதாக தங்களுக்குத் தேவையானதை வாங்க வேண்டும். அதேநேரம் இதுபோல மக்கள் ஒன்றுகூடும் இடங்களை வைத்து சில மோசமான சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது ஜெர்மனியில் நடந்துள்ளது. அங்குள்ள மாக்டேபர்க் என்ற பகுதியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்புச் சந்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்தையில் வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் செய்யப் பல நூறு பேர் குவிந்து இருந்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாறுமாறாக வந்த கார் ஒன்று அந்த கூட்டத்தில் பாய்ந்தது. இந்த கொடூர விபத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காரை ஓட்டிச் சென்றதாகச் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மருத்துவர் தலேப் என்பவரை ஜெர்மனி போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மன் கார் விபத்து: விபத்தை ஏற்படுத்திய டாக்டர் தலேப் ஜெர்மனியில் நிரந்தரமாகத் தங்க பிஆர் பெற்றவர் என்றும் அவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெர்மனியில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாக்டேபர்க் நகர மேயர் ரெய்னர் ஹசெலோஃப் கூறுகையில், “தற்போதைய சூழலில் ஒரே நபர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்.. அவரையும் நாங்கள் கைது செய்துவிட்டோம். இதனால் இந்த ஊருக்குக் கூடுதலாக எந்தவொரு ஆபத்தும் இல்லை. வாடகை பிஎம்டபிள்யூ கார் இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றனர். ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகம்: இந்த மோசமான விபத்தில் ஏழு இந்தியர்களும் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்ட போதிலும் மீதமுள்ள 4 பேரின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதை மிக மோசமான செயல் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை, காயமடைந்த இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கொடூரமான மற்றும் முட்டாள்தனமான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்தில் காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்” என்றார்.