50 வருட குடும்ப ஆட்சியை சாய்த்த.. 14 வயது சிறுவனின் கார்ட்டூன் ஓவியம்! சிரிய ஆட்சி கவிழ்ந்தது எப்படி

50 வருட குடும்ப ஆட்சியை சாய்த்த.. 14 வயது சிறுவனின் கார்ட்டூன் ஓவியம்! சிரிய ஆட்சி கவிழ்ந்தது எப்படி

டமாஸ்கஸ்: 50 வருடமாக சிரியாவை ஆண்டு வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. கடந்த 13 வருடங்களுக்கு மேலாக அங்கே போர் நடந்து வருகிறது. இதில் கடந்த 13 வருடமாக நடக்கும் போர்தான் அங்கே ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியாக மாறியது. 13 வருடங்களுக்கு முன் நடந்த இந்த காட்டு தீயை தூண்டிவிட்ட சிறு நெருப்பு பொறிதான் ஒரு சிறுவனின் ஓவியம்!

2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தெற்கு சிரியாவின் டாரா தெருக்களில் அந்நாட்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக 14 வயது இளைஞன் ஒருவனின் கிளர்ச்சிச் செயல் நாட்டின் தலைவிதியையே மறுவடிவமைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அன்று அந்த சிறுவன் வரைந்த சுவர் ஓவியம்.. கார்ட்டூன் ஓவியம் ஒன்றுதான் அங்கே உள்நாட்டுப் போரைத் தூண்டியது. அப்போது வெறும் 14 வயது இருந்த மௌவியா சியாஸ்னே.. அந்நாட்டு அரசை விமர்சனம் செய்து கார்ட்டூன் ஓவியம் ஒன்றை வரைந்தார். அதோடு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் வார்த்தைகளையும் கீழே குறிப்பிட்டு இருந்தார்.

“எஜாக் எல் டோர், யா டாக்டர் ( உங்களின் நேரம் முடிந்துவிட்டது டாக்டர்) என்று குறிப்பிட்டு இருந்தார். அதிபர் பஷர் அல்-அசாத் மருத்துவப் பின்னணியைக் கொண்டவர் என்பதால்.. உங்களுடைய கதை முடிந்துவிட்டது டாக்டர் என்று குறிப்பிட்டு படம் வரைந்து இருந்தார். அதுவரை அங்கே சிறு சிறு மோதலாக நடந்து வந்த மக்கள் புரட்சி இந்த ஓவியம் டிரெண்டான பின் உள்நாட்டு போராக உருவெடுத்தது. 2017 வாக்கில் இந்த போர் உச்சம் அடைந்தது. அந்நாட்டு அரசால், காவல்துறையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மௌவியாவும் அவரது நண்பர்களும் அரசை கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனர். தங்களுக்குத் தெரிந்த மிகத் தெளிவான முறையில் தங்கள் குரல்களைக் வெளியே காட்ட வேண்டும் என்று முடிவு செய்து.. இப்படி ஓவியம் வரைந்தனர். அது செய்தி ஊடகங்கள் வழியாக உலகம் முழுக்க பரவி தேசிய அளவில் கவனம் பெற்றது. அதுவே பின்னர் மக்கள் புரட்சிக்கும் வழி வகுத்தது.

அந்நாட்டு அதிபர் ஆசாத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய ரகசிய போலீஸ் அல்லது முகபாரத் போலீஸ் இந்த ஓவியம் காரணமாக கடுப்பாகி மௌவியா சியாஸ்னேவை 26 நாட்கள் காவலில் வைத்தனர். சித்திரவதை மற்றும் தாக்குதலுக்கு ஆளான அவர்கள் இறுதியில் விடுவிக்கப்பட்ட போது உடல் முழுக்க கடுமையான காயத்தோடு உயிருக்கு போராடியபடி வெளியே வந்தனர்.

இதற்கு எதிராக உடனே மக்கள் போராட அதை தடுக்க அரசு படைகளை களமிறக்கியது. இது மேலும் போராட்டத்தை தூண்ட.. நிலவரம் கையை மீறி அது மக்கள் போராட்டமாக மாறி அப்படியே புரட்சியாக உருவெடுத்தது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. மக்கள் சிந்திய ரத்தங்கள் நாடு முழுக்க பரவ அதுவே அரசுக்கு எதிராக மிகப்பெரிய போரின் தொடக்கமாக மாறியது. தோல்வி : சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தனை காலமாக அங்கே பல போராளி அமைப்புகள் அங்கே சிரியா அரசை எதிர்த்து போராடி வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிகம் அறியப்படாத ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழு அங்கே வெற்றி அடைந்து உள்ளது. இது கிட்டத்தட்ட மிகப்பெரிய அரபு புரட்சியாக பார்க்கப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. அபு முகமது அல்-ஜோலானி மிகவும் இளம் தலைவர் என்றாலும் அவருக்கு ராணுவ ரீதியாக நிறைய அறிவு உள்ளது. இவர்தான் அந்நாட்டு புரட்சிப்படைகளை வழிநடத்தி அங்கே ஆட்சி கவிழ வழிவகுத்துள்ளார்.