மொத்தமாக முடங்கும் ஈரான்? டிரம்ப் முதல் சிரியா உள்நாட்டு போர் வரை.. தலைவலியை ஏற்படுத்தும் 7 சவால்

மொத்தமாக முடங்கும் ஈரான்? டிரம்ப் முதல் சிரியா உள்நாட்டு போர் வரை.. தலைவலியை ஏற்படுத்தும் 7 சவால்

 

டெஹ்ரான்: காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது, சிரியா உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களின் வெற்றி உள்ளிட்டவற்றால் ஈரான் மொத்தமாக முடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மீண்டு வர ஈரான் 7 பெரிய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது.

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் மோதல் போக்கு என்பது இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல உறவு என்பது இல்லை. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதனால் ஈரான் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் ஈரான் எண்ணெய் வளமிக்க நாடு என்பதால் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்து ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது ஈரான் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

அதாவது பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த போர் என்பது ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிரானது. ஹமாஸ் அமைப்பின் படை தளபதிகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர், தளபதிகளையும் இஸ்ரேல் கொன்றுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதுபோன்ற காரணங்களால் ஈரான் தற்போது 7 பெரிய சவால்களை சந்தித்துள்ளது. இதில் முதல் சவால் என்பது இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும், ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்களும் கொல்லப்பட்டது தான். அதேபோல் ஈரானுக்கு ஆதரவாக இருந்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தும் கிளர்ச்சியாளர்களின் உள்நாட்டு போரால் தப்பியோடியுள்ளார். சிரியா வழியாக தான் ஹெஸ்புல்லா உள்ளிட்ட பிற நாடுகளில் இயங்கும் தனது அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை அனுப்பியது. இனி அதில் சிக்கல் ஏற்படும். அதோடு ஈரான் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த உதவிய சிரியா, ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகள் தான் உதவி செய்தன. தற்போது அதன் தலைவர்கள் இறந்துள்ளதோடு, சிரியா அதிபர் தப்பியோடி உள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறைய வாய்ப்புள்ளது.

இரண்டாவது சவால் என்பது ஹமாஸ், ஹெஸ்புல்லா தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதேபோல் இஸ்ரேலும், ஈரான் வான் எல்லையில் நுழைந்து விமானப்படை விமானங்கள் மூலம் ஈரானை தாக்கியது. இதனால் ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் போக்கு என்பது ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியாகவும், ஈரானுக்கு எதிராகவும் உள்ளது. மேலும் இஸ்ரேல் எல்லையில் செயல்பட்டு வந்த ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுப்பதில் ஈரானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது 2வது சவாலாக மாறி உள்ளது.

3வது சவால் என்பது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது தான். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். டொனால்ட் டிரம்ப், என்பவர் ஈரானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியபோதே ஈரானின் முக்கிய விமான, ராணுவ தளங்கள் மீதும், ஆயுத கிடங்குகளின் மீதும், அணுஆயுத ஆய்வு சார் இடங்களிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் அவர் அமெரிக்க அதிபரான பிறகு ஈரானுக்கு பெரும் தலைவலியாக இருப்பார்.

4வது சவால் என்னவென்றால் ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் இருப்பது தான். அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவுடன், ஈரானுக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் ஈரான், ரஷ்யாவுக்கு உதவி செய்து வருகிறது. உக்ரைன் மீது ஏவ ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கி உள்ளது. அதேவேளையில் மறுபுறம் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. இதனால் ரஷ்யாவுக்கு உதவிய ஈரான் மீது ஐரோப்பிய நாடுகள் கோபம் கொண்டுள்ள அந்த நாட்டுக்கு எதிராக கிளம்பி உள்ளன.

5வது சவால் என்று பார்த்தால் அது ஈரானின் பொருளாதார நிலையாகும்.அதாவது ஈரான் தற்போது பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க தொடங்கி உள்ளது. ஈரானின் பட்ஜெட் என்பது பற்றாக்குறையாக உள்ளது. அதேபோல் பென்ஷன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் நிதி பற்றாக்குறை என்பது உள்ளது. இதற்கிடையே தான் பிற நாடுகள் ஈரானுக்கு எதிராக கிளம்பும்போது அதனை சமாளிப்பதில் ஈரானுக்கு பிரச்சனை எழலாம்.

6வது சவால் என்பது ஈரானின் வசிக்கும் மக்கள் தற்போதைய அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். பொதுவாக ஈரான் அரசுக்கும், மக்கள் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் சமீப காலமாக ஈரான் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். ஹிஜாப் விவகாரம், பிற நாடுகளுடனான மோதல் உள்ளிட்ட சில விஷயங்களால் ஈரான் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியடைந்துள்ளனர். இது 6வது பிரச்சனையாகும்.

7 வது சவால் என்பது அந்த நாட்டின் உயர்மட்ட தலைவராக(Supreme Leader) அலி காமேனி உள்ளார். இவர் தற்போது உடல்நலக்குறைவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறார். இவருக்கு ஏதாவது நிகழும் பட்சத்தில் அடுத்த உயர்மட்ட தலைவர் யார்? என்பதில் ஈரானில் குழப்பம் நிலவி வருகிறது. இது 7 வது பிரச்சனையாகும். இந்த 7 சவால்களும் ஈரானுக்கு தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு நாட்டின் படைபலம், ஆயுத பலம், போதுமான அளவு நிதி மற்றும் மக்களின் ஆதரவு, பிற நாடுகளின் ஆதரவு என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் இந்த விஷயங்களில் ஈரானின் நிலைமை கவலை கொள்ளும் வகையில் உள்ளது. இதனால் ஈரான் மொத்தமாக முடங்குகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.