யாழ்ப்பாண இளைஞரை நாம் உக்ரைன் போரில் பாவிக்கவில்லை – ரஷ்ய தூதரகம் பிரத்தியேக அறிவிப்பு !

யாழ்ப்பாண இளைஞரை நாம் உக்ரைன் போரில் பாவிக்கவில்லை –  ரஷ்ய தூதரகம் பிரத்தியேக அறிவிப்பு !

சுமார் 280 இலங்கையர்கள், உக்ரைன் போரில் சண்டை பிடிக்கிறார்கள். இவர்களை இலங்கையில் உள்ள ரஷ்ய முகவர்கள் பண ஆசை காட்டி ரஷ்யா அனுப்பி வைத்தார்கள் என்பது ஆதார பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா இதனை கடுமையாக கண்டித்து மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் புகைப்படங்களோடு கூடிய ஆதாரம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ரஷ்யா கீழ் காணும் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண இளைஞர்களை உக்ரைன் போரில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது. விசிட் விசா ஊடாக பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளுக்கு பயணிக்க முற்பட்ட யாழ்.இளைஞர்களை உக்ரைன் யுத்தத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக வௌியான செய்திகள் ஆதராமற்றவை என ரஷ்ய தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – ரஷ்யா இடையிலான பாரம்பரிய நட்பு ரீதியான உறவை இழக்கச் செய்வதை நோக்காகக் கொண்டு வௌிப்படுத்தப்படும் உறுதிப்படுத்தப்படாத தரவுகள் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ரஷ்ய தூதரம் தெரிவித்துள்ளது.

தொழில் அல்லது தனிப்பட்ட ரீதியில் ரஷ்யாவிற்கு செல்லும் வௌிநாட்டவர்களை ரஷ்யா மதிப்பதாகவும் ரஷ்யாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகமே அடிப்படையில் கையாள வேண்டும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்நாட்டிலுள்ள சட்டவிரோத வௌிநாட்டு முகவரகங்கள் இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியமை தொடர்பில் தூதரகத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை என கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை தரப்பிலிருந்து ஏதேனும் கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில் ஆதரவு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.