இலங்கை ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணம்! டிச.16-ல் இந்தியா வருகை தருகிறார் அனுர குமார திசநாயக்க!

இலங்கை ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணம்! டிச.16-ல் இந்தியா வருகை தருகிறார் அனுர குமார திசநாயக்க!

டெல்லி: இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தமது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கு டிசம்பர் 16, டிசம்பர் 17 தேதிகளில் வருகை தருகிறார் அனுர குமார திசநாயக்க. இந்த பயணத்தின் போது இருதரப்பு உறவுகள், தமிழக மீனவர் பிரச்சனை, ஈழத் தமிழர் அரசியல் தீர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றவர் அனுர குமார திசநாயக்க. சிங்கள பேரினவாத இயக்கமான ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பாக போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார் அனுர குமார திசநாயக்க
இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டும் தேர்தலை நடத்தினார் அனுர குமார திசநாயக்க. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது.

இலங்கை ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்ற உடனேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அனுர குமார திசநாயக்க தாம் ஜனாதிபதியான பின்னர் சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் ஜெய்சங்கர்தான்.

இந்த நிலையில்தான் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வரும் 16-ந் தேதி டெல்லி வருகை தர உள்ளார். டெல்லியில் டிசம்பர் 16, 17-ந் தேதி தங்கும் அனுர குமார திசநாயக்க பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது ஈழத் தமிழர் அரசியல் பிரச்சனை, தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் இலங்கையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டம், சீனாவின் மேலாதிக்கம் ஆகியவை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படக் கூடும் என தெரிகிறது.