நண்பனுக்காக களமிறங்கிய புதின்.. சிரியா போரில் தாக்குதலை தொடங்கிய ரஷ்ய போர் விமானங்கள்

நண்பனுக்காக களமிறங்கிய புதின்.. சிரியா போரில் தாக்குதலை தொடங்கிய ரஷ்ய போர் விமானங்கள்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. இந்த போரில் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நண்பர் பஷர் அல் அசாத்தை காக்க சிரியாவில் மோதலில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதலை தொடங்கி உள்ளன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிரியா அதிபராக பஷர் அல் அசாத் உள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிபராக உள்ளார். தற்போது அங்கு உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவில் செயல்பட்டு வரும் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் அதிபர் பஷர் அல் அசாத்தை எதிர்த்து வருகின்றனர்.
இந்த கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் 2வது பெரிய நகராக அறியப்படும் அலெப்போவை கைப்பற்றி உள்ளனர். தற்போது கிளர்ச்சியாளர்களும், அதிபர் பஷர் அல் அசாத்தின் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அலெப்போ நகரை தொடர்ந்து இட்லிப் நகர், ஹமா மாகாணத்தில் உள்ள பிற நகரங்களை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளார். சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கும், ஈரான், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு என்பது இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த 2 நாடுகளும் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஏற்கனவே உதவி செய்துள்ளன.

அதாவது கடந்த 2011ல் சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஒன்று திரண்டனர். அலெப்போ நகரை மொத்தமாக கைப்பற்றினர். நிலைமை எல்லை மீறி சென்றபோது. இந்த போர் 4 ஆண்டுகளை கடந்து நடந்தது. அப்போது ரஷ்யாவும், ஈரானும் தான் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு உதவி செய்தனர். ரஷ்யாவின் போர் விமான தாக்குதலுக்கு பிறகு அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் இந்த முறையும் ஈரான், ரஷ்யாவிடம் உதவி கோரினார். ஆனால் ரஷ்யா உக்ரைனுடன் போர் புரிந்து வருகிறது. அதேபோல் ஈரானும், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இருநாடுகளும் உதவி செய்யுமா? என்ற பெரிய கேள்வி எழுந்தது. ஆனால் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு, ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு கரம் நீட்டி உள்ளன. இருநாட்டு தலைவர்களும் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்திடம் தொலைபேசியில் பேசி உள்ளனர். சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு தேவையான போர் விமானங்கள் மற்றும் டிப்ளமோட் ரீதியிலான உதவிகள் வழங்குவதாக இருநாடுகளும் கூறியுள்ளன.

அதுமட்டுமின்றி முதற்கட்டமாக ரஷ்யாவின் போர் விமானங்கள் சிரியாவின் போர் விமானங்களுடன் சேர்ந்து தாக்குதலை தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி உள்ள இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களும், கிளர்ச்சியாளர்களும் இறந்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த தாக்குதல் என்பது அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் ரஷ்யா, சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வரும். இதற்கு தனிப்பட்ட முறையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சிரியா அதிபர் பஷர் அல் அசாத் இடையே நல்ல நட்பு உள்ளது.

அதேபோல் ஈரானில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். ஆட்சியாளர்களும் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் தான். சிரியா அதிபர் பஷர் அல் அஷாத்தும் ஷியா பிரிவை சேர்ந்தவராக உள்ளதால் ஈரானும் தொடர்ந்து ஆதரவு வழங்கும். அதோடு ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பான லெபானில் செயல்படும் ஹெஸ்புல்லாவிற்கு சிரியா வழியாக தான் ஆயுதங்கள் செல்லும். இதனால் ஈரான் நிச்சயம் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை விட்டு கொடுக்காது. இதனால் வரும் நாட்களில் இந்த உள்நாட்டு போர் அதிக பதற்றத்தை ஏற்படுத்துவதோடு வேறு சில நாடுகளின் தலையீடுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது.