வாஷிங்டன்: தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப், ”அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன்,” என வெளிப்படையாக பேசி இருந்தார். சொன்ன வாக்கை டிரம்ப் காப்பாற்றி உள்ளார்.
தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் எனது அரசில் பணியாற்றுவதற்கும், வீண் செலவை குறைக்கவும், அமெரிக்காவை காப்பாற்றுவதற்கும் தேவைப்படுகிறார்கள்.
2026ம் ஆண்டு ஜூலை 4ம் தேதிக்குள் அவர்களின் பணி முடிவடையும். சுதந்திர பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவில் திறமையான அரசாங்கம் அமைந்திருப்பது நம் நாட்டிற்கு கிடைத்த பரிசு’ என குறிப்பிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடன், அமெரிக்கா ஒரு தகுதியான, சமரசமில்லாத தலைவரை அதிபராக பெற்றுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது