இலங்கை அரசாங்கமும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகமும் இணைந்து இலங்கையில் பாதுகாப்பான குடியகல்வை ஊக்குவிப்பதற்கும், ஆட்கடத்தலைத் தடுப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.
அதற்கமைய சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அனுசரணையுடன் இலங்கையைச் சேர்ந்த 69 அதிகாரிகளுக்கு குடியகல்வு சட்டம் மற்றும் கொள்கை தொடர்பில் சான்றிதழ் கற்கைநெறி வழங்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் அவ்வதிகாரிகள் ஆட்கடத்தலை முயற்சிகளை முறியடிப்பதற்கு அவசியமான அறிவையும், திறன்களையும் பெற்றிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் ‘ஆட்கடத்தலை முறியடிக்கும் நோக்கில் சிவில் சமூகத்தை வலுப்படுத்தல்’ செயற்திட்டம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த 6 மாதகாலக் கற்கைநெறியின் ஊடாக அரசதுறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் எனப் பலரும் குடியகல்வு சட்டம் பற்றியும், ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் போதிய தெளிவைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் கேப்ரியல் க்ரோ, ‘ஆட்கடத்தல் என்பது உலகளாவிய ரீதியில் மிகமுக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்ற போதிலும், அதற்கு எதிரான போராட்டம் என்பது சமூகங்களின் மத்தியிலிருந்தே தொடங்கும்.
அதற்கமைய பாதுகாப்பான குடியகல்வை ஊக்குவிக்கும் அதேவேளை, ஆட்கடத்தலை முறியடிப்பதற்கு அவசியமான தெளிவூட்டலை வழங்குவதை முன்னிறுத்தி இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதையிட்டு பெருமிதமடைகின்றோம்’ எனத் தெரிவித்துள்ளார்.