உலகப் புகழ் பெற்ற இந்திய தபேலா வாத்தியக் கலைஞர் ஜாகிர் ஹுசைனின் மறைவுக்கு திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதை அவரது குடும்பத்தினர் நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளனர்.
புகழ் பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாகிர் ஹுசைன், தனது 7ஆவது வயதில் தபேலா வாசிக்க ஆரம்பித்தார்.
1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி மும்பையில் பிறந்த ஜாகிர் ஹுசைன் செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்
12 வயதில் இந்தியா முழுவதும் பயணித்து தபேலா வாசித்ததுடன் தனது வாழ்நாள் முழுவதும் இந்திய இசையுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்து உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றார்.
‘லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்’ என்ற இவரது முதல் இசை அல்பம் 1973ஆம் ஆண்டில் வெளிவந்தது.
‘மேக்கிங் மியூசிக்’, கிழக்கு – மேற்கு ஃப்யூஷன் வகையின் தலைசிறந்த அல்பமாக கருதப்படுகிறது.
ஜாகிர் ஹுசைனுக்கு இந்திய அரசால் பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் சங்கீத நாடக அகடமி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.