வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே தென்கொரியாவைக் குறிவைத்து வடகொரியா மிக வினோதமான ஒரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ராணுவம், ஏவுகணை உள்ளிட்டவை எதுவும் இல்லாமல் வடகொரியா நடத்தும் இந்த உளவியல் தாக்குதலில் தென்கொரிய எல்லையோர கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரியத் தீபகற்பத்தில் உள்ள தென்கொரியா- வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்த மோதல் போக்கு இப்போது தொடங்கியது இல்லை. பல காலமாகவே நீடித்து வருகிறது.
இதனால் இரு கொரிய நாடுகளின் எல்லைகள் பதற்றமாக இருக்கும். அவ்வப்போது எல்லை தாண்டி தாக்குதல்களும் நடக்கும். இதற்கிடையே தென்கொரியாவில் வினோதமான தாக்குதலை வடகொரியா நடத்தி இருக்கிறது. வினோத தாக்குதல்: தென் கொரியா எல்லையில் அமானுஷ்யமான, வினோதமான ஒலிகளை இப்போது வடகொரியா ஒலிபரப்பி வருகிறது.
இது தென்கொரியக் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எல்லையில் உள்ள டாங்சன் என்ற கிராமத்தைக் குறிவைத்துத் தான் வடகொரியா இதைச் செய்து வருகிறது. அங்கு கார் விபத்துகள் ஏற்படுவது போன்ற சத்தம், பேய் அலறுவது என்று தொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை ஸ்பீக்கரில் போட்டு வடகொரியா ஒலிபரப்புகிறதாம்.
புலம்பும் பொதுமக்கள்: இது அங்குள்ள கிராம மக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “இடைவிடாமல் இந்த சத்தத்தை எழுப்புகிறார்கள். இது எங்களைப் பைத்தியமாக்குகிறது.. இந்த சத்தம் வந்து கொண்டே இருப்பதால் இரவில் தூங்க முடிவதில்லை. குண்டு வீசவில்லை என்றாலும் கிட்டதட்ட அந்த பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது” என்றார். கடந்த ஜூலை மாதம் முதலே இதை அவர்கள் செய்து வருகிறார்கள்.
24 மணி நேரமும் கேப் விடாமல் தொடர்ந்து இதுபோன்ற சத்தத்தை ஒலிபரப்பி வருகிறார்கள். உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், பீரங்கித் தாக்குதல் என்று உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் சத்தங்களை வடகொரியா தொடர்ந்து ஸ்பீக்கரில் ப்ளே செய்து வருகிறது.
உளவியல் பாதிப்பு: இது கிராமவாசிகளுக்கு உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, தலைவலி மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.. அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், “பல மாதங்களாகவே தொடர்ந்து இதைச் செய்து வருகிறார்கள். முன்பாவது மனித ஒலிகளைத் தான் எழுப்பினார்கள். அதைச் சற்று சமாளிக்கும் வகையில் இருந்ததது. ஆனால், இப்போது பேய் சத்தம், உலோகங்கள் மோதும் சத்தம் என எல்லை மீறிப் போகிறார்கள்” என்றார்.
பின்னணி: இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு உதவியது. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. முதலில் தென்கொரியா தனது நட்பு நாடுகளுடன் போர்ப் பயிற்சி செய்தது.
அதன் பிறகே எல்லையில் வினோத தாக்குதல்கள் நடக்கத் தொடங்கின. முதலில் வடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ்களை தென்கொரியா வீசியது. அதற்குப் பதிலடியாக வடகொரியா குப்பைகள் நிரப்பப்பட்ட பலன்களை தென்கொரியா மீது அனுப்பி வெடிக்கச் செய்தது. இதற்குப் பதிலடியாக தென்கொரியா எல்லையில் ஸ்பீக்கர் வைத்துப் பாடல்களை ஒலிபரப்ப தொடங்கியது. அதன் பின்னரே வடகொரியாவும் இதுபோல ஸ்வீக்கர் வைத்தது. ஆனால், உளவியல் ரீதியாகத் தாக்க மோசமான சத்தங்களை ஒலிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.