பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவகுத்துள்ளது. தென் கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அடுத்த நாள், 4B இயக்கத்தைப் பற்றி கூகுளில் 2 லட்சம் நபர்களுக்கு மேல் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த 4B இயக்கத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர்.
இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களோடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர்.
இந்த இயக்கத்தின் மூலம் அமெரிக்கப் பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றனர்? இந்த இயக்கத்தின் எந்தெந்த நோக்கங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன?
4B இயக்கம் என்றால் என்ன?
4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது.
இந்த இயக்கம், அந்த நாட்டில் ‘மீ டூ’ (Me Too) இயக்கத்திலிருந்து உருவானது.
தென் கொரியாவில் காணப்படும் பாலினச் சமத்துவமின்மைக்கு எதிராகப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.
4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன?
*பி ஹான் (திருமணம் வேண்டாம்)
*பி யேனி (டேட்டிங் வேண்டாம்)
*பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்)
*பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்)
அதாவது, இந்த இயக்கத்தின் நோக்கம், திருமணம், டேட்டிங், உடலுறவு, குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது.
இத்தகைய தீவிரமான முடிவை தென் கொரியப் பெண்கள் எடுப்பதற்கு என்ன காரணம்?
அவர்களை இப்படி முடிவெடுக்க வைத்த காரணிகள் என்ன?
இந்த இடத்தை அடைய அவர்களை எது ஊக்கப்படுத்தியது?
அமெரிக்கப் பெண்களுக்கு இருக்கும் அச்சம் என்ன?
அமெரிக்காவில் 4B இயக்கம் வேகமெடுக்க, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி முக்கியக் காரணமாக உள்ளது.
அவருடைய தேர்தல் பிரசாரத்தின் போது, கருக்கலைப்புக்கான உரிமையைக் கூட்டாச்சி அந்தஸ்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார்.
அவருடைய இந்த அறிவிப்பு பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை வழங்குகிறதா? அல்லது நீக்குகிறதா?
அதனை அந்தந்த மாகாணங்கள் தீர்மானிக்கும்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருக்கலைப்பை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள் கூட கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக உள்ளன.
டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்திருந்தனர்.
அவர்களது உரிமையை அங்கிகரிக்காத ஆண்களுடனான காதல் உறவுகளிலிருந்து அவர்கள் விலகப் போவதாகக் கூறுகின்றனர். ‘டிக்டாக்’ போன்ற சமூக வலைதளச் செயலிகளிலும் இந்தப் போக்குப் பரவியுள்ளது.
இதற்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாகச் சமூக வலைதளத்தில் செல்வாக்கு உடையவரான நிக் ஃபண்டெஸ் தனது எக்ஸ் வலைதளத்திப் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், ‘உங்கள் உடல் மீது எங்களுக்கு எப்போதும் அதிகாரம் உள்ளது,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
நிக் ஃபண்டெஸ் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர் தனது சமூக வலைதளத்தில் டிரம்பிற்காகப் பிரசாரங்களையும் மேற்கொண்டார். நிக்கின் பதிவு பல இளைஞர்களால் ஆதரிக்கப்பட்டது. அந்தப் பதிவு 35,000 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
26 வயதான அலெக்ஸா, இந்த இயக்கம் பற்றி டிரம்பின் வெற்றிக்குப் பிறகு பல காணொளிகளை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெண்களை அவர்களது உரிமைக்காக இந்த இயக்கத்தில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
என்.பி.சி செய்தி முகமையுடனான நேர்காணலில், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இயக்கத்தில் பங்கேற்கப் போகிறீர்களா? என்று கேட்டபோது, அவர், “இல்லை. நாங்கள் எங்கள் உரிமை மீறப்படுவதற்கு எதிராகப் போராட விரும்புகிறோம். எங்களுக்கு கருக்கலைப்பு உரிமை இல்லையெனில், நாங்கள் உடலுறவு கொள்ள ஒப்புக்கொள்ள மட்டோம். டிரம்பின் வெற்றிக்குப் பின், நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லை,” என்கிறார்.
இதுகுறித்துப் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளர், சுனிதா, “பெண்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை அமெரிக்காவில் அரசியலாக்கப்படுவது புதிதல்ல. பல தசாப்தங்களாக நடந்துகொண்டிருக்கும் அரசியலின் ஒரு பரிமாணமே. இருப்பினும், ஆண்களுடனான உறவை முற்றிலுமாகத் துண்டிப்பது தற்காலத்தில் ஒரு புதிய செய்தி. இந்த இயக்கம் தன்னிச்சையாக உருவாகவில்லை. இது பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டதற்கான எதிர்வினை. அது இணையத்தின் மூலம் நடைபெறுவதால் அதனுடைய தாக்கத்தை அறியமுடியவில்லை. ஆனால், இந்தச் செயற்பாட்டாளர்கள் இணையத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்,” என்கிறார்.