இன்னொரு முறை கை வைச்சு பாருங்க.. ஈரான் பொருளாதாரமே மொத்தமாக முடங்கும்! இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

இன்னொரு முறை கை வைச்சு பாருங்க.. ஈரான் பொருளாதாரமே மொத்தமாக முடங்கும்! இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கிறார். இஸ்ரேல் மீது இன்னொரு தாக்குதலை ஈரான் நடத்தினால் அந்நாட்டுப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஈரான் உடனும் பதற்றம் அதிகரித்தே வருகிறது.முதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொலைக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

இதற்கிடையே மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் தொடர்ந்து மிரட்டி வருகிறது. மிரட்டல்: இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இப்போது ஈரானை எச்சரித்துள்ளார். அதாவது இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படும் நிலையில், அதுபோல தாக்குதல் நடத்தினால், ஈரானின் மொத்த பொருளாதாரமே முடங்கிவிடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் அவர் வெளியிடும் இரண்டாவது வீடியோ இதுவாகும். ஈரான் நாட்டை அந்நாட்டுத் தலைவர் கமெனி தவறாக வழிநடத்துவதாகவும் இதில் நெதன்யாகு குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர்: இது தொடர்பாக அவர் பேசுகையில், “சமீபத்தில் தான் ஈரான் மக்களுக்கு நேரடியாக உரையாற்றினேன். உலகெங்கும் பல லட்சம் மக்கள் அந்த வீடியோவைப் பார்த்தனர். அதன் பிறகு பல ஈரானை நாட்டை சேர்ந்த பலரும் எங்களைத் தொடர்பு கொண்டனர். பல கருத்துகளைச் சொன்னார்கள். இதையடுத்து நான் இரண்டாவது முறையாக ஈரான் மக்களுக்காகப் பேச முடிவு செய்து இருக்கிறேன்” என்று தனது உரையைத் தொடங்கினார்.