இந்திய சினிமாவில் கமல் ஒரு உலகநாயகனாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கமல் இன்று ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைத்தார். இனி யாரும் தன்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம். கற்றது கையளவு என்பது போல் நான் இன்னும் கற்றுக் கொண்டேதான் இருக்கிறேன். அதனால் என்னை இனிமேல் கமல்ஹாசன் அல்லது KH என்றே அழைக்கவும் என்று கூறியிருந்தார்.
கமலின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதே மாதிரியான ஒரு அறிவிப்பைத்தான் ஏற்கனவே அஜித்தும் கூறியிருந்தார். தன்னை யாரும் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கவேண்டாம். அஜித்குமார் அல்லது AK என்றே அழைத்தால் போதுமானது என்று அறிவித்திருந்தார்.இப்போது அதே வரிசையில் கமலும் இப்படி கூறியிருப்பது சில பேரால் வரவேற்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கு இது ஒரு பாடமாக கூட இருக்கலாம். ஏனெனில் ஒரு படம் நடித்ததுமே தனக்கென ஒரு அடைமொழியை வைத்துக் கொண்டு பந்தா காட்டி வருகின்றனர் சில பேர். அப்படியிருக்கும் பட்சத்தில் சினிமாவில் பெரிய ஆளுமையாக இருக்கும் கமலே இப்படி கூறியது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகவே கமல் இதை பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தாராம். அவரின் பிறந்த நாள் போதே இதை அறிவிக்கலாம் என நினைத்தாராம். ஆனால் அவருடைய நலம் விரும்பிகள் சில பேர் பிறந்த நாளின் போது இப்படி ஒரு செய்தியை சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அறிவித்திருக்கிறார் கமல்.
இதற்கிடையில் அவரின் நடிப்பில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தில் கமலுக்கு அடைமொழியாக விண்வெளி நாயகன் என்று டைட்டிலில் போட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு ஒரு வேளை இனிமேல் விண்வெளி நாயகன் என ரசிகர்கள் அழைப்பார்கள் என்ற காரணத்தினால் கூட உலக நாயகன் பட்டத்தை துறந்தாரா கமல் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.