வட கிழக்கில் உள்ள மக்கள் மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் உள்ளார்கள். அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தலில், வட கிழக்கில் JVP கட்சி போட்டியிட உள்ள நிலையில். தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம், வட கிழக்கிலும் ஏற்பட வேண்டும். நாம் JVPயினருக்கே வாக்குகளைப் போட வேண்டும் என்று சிலர் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இலங்கையில் 13ம் திருத்தச் சட்டம் அமுலுக்கு வர இருந்தவேளை, நீதிமன்றம் சென்று, அதற்கான தடை உத்தரவை வாங்கியவர்களே இந்த JVP அமைப்பினர் என்பதனை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
காணி அதிகாரம் , பொலிஸ் அதிகாரம் என்பதனை தமிழர்களுக்கு தருவதில் பெரும் முட்டுக் கட்டையாக இருந்த அமைப்பு தான் இந்த JVP. தமிழ் தேசியத்தை உடைக்கவே, JVP இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில், குடியேற்றங்களுக்கு எதிராக, காணிகளுக்காக, மற்றும் புதிதாய் முளைத்த புத்தகோவில்களுக்கு எதிராக தமிழர்கள் போராடினார்கள். அதுபோன்ற ,ஒரு போராட்டத்தை தமிழர்கள் இன்று ஆரம்பிக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது.
தமிழர்கள் JVP கட்சிக்கு வாக்குகளைப் போட்டு, தமிழர் பிரதிநிதி என்று சொல்லி அவரை எப்படி பாராளுமன்றம் அனுப்ப முடியும் ? இப்படி நடந்தால் அது ஒரு பெரும் வரலாற்றுப் பிழையாக மாறிவிடும். எனவே தமிழர்களே நீங்கள் விழித்துக் கொள்ளும் , காலம் வந்துவிட்டது. நடக்கவுள்ள பொதுத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் தமிழர்களை அதுவும் இளையோர்களை, மற்றும் படித்த தமிழர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பி வைத்தால் மட்டுமே, எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும்.